Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, June 23, 2011

துரோகம்




இந்த கூர்வாள் நண்பர்களுக்கானது.
துரோகத்தால் முதுகில் கிழிக்க
பிரத்யேகமாய் வடிவமைத்தோம்

நாங்கள் சேர்ந்து, சேர்ந்து விளையாடினோம்
துரோகத்தின் ஒவ்வொரு பாடத்தையும்
செயல்முறை விளக்கமாய்
செய்து, செய்து பார்த்தோம்

ஒவ்வொரு முதுகாய் தேடித் தேடி குத்தினோம்
உதிரம் தெறிக்க கொலையாகுபவர்கள்
பதறிச் சரிவதை நிதானமாய் ரசித்தோம்

"ஒருநாள் எங்களுக்குள்ளான
பரஸ்பர நம்பிக்கை
பொய்க்கும் போது
எங்களை நாங்களே
குத்திக் கொல்வோம்"
....
...
...
...
என ஆவலாய் காத்திருக்கும்
உங்கள் முதுகு தான்
எங்களின் அடுத்த இலக்கு !

Tuesday, January 18, 2011

இரண்டு நாள் முந்திப் பிறந்தவை.

அடையின் பதினாறாம் நாளில்
சீக்குவந்து செத்துக் கிடக்கும்
கருஞ்செவலைக் கோழியின்
மிச்சமிருக்கும் உடம்புச் சூட்டில்
பொரித்திருக்கும் போல,
புதிதாய் கேட்கிறன
ஏழெட்டுக் குரல்கள்.

கரப்பானுக்கும், கள்ளப்பிராந்துக்கும்
காப்பந்து காக்க பஞ்சாரம் போதாது.

Tuesday, September 14, 2010

முன்னேர் வழிசெல்லும் பின்னேர்

அவர்கள்
தோழிகளாக இருக்கும் போது,
எதிர்பார்ப்புகள் ஏதுமில்லா
பரிசுத்த அன்பை
பொழிபவனைப் போலவே இருந்தான்.

அவர்கள்
காதலிகளாக மாறும் போது,
அன்பின் ஆழ அகலத்தின்
பரிமாணங்களை நீக்கமற
விளக்குபவனைப் போலவே இருந்தான்.

அவர்கள்
மனைவிகளாக எதிபார்த்துக்
காத்திருக்கையில்,
புறமுதுகைக் காட்டிக் கொண்டு
பக்கத்து வீடுகளில்
பேராண்மையை நிரூபித்துக் கொண்டிருந்தான்.

இதெற்கெல்லாம் முன்னமும் முன்னொரு காலத்தில்,
அவன் தான்
தேவதைகளாக இருந்தவர்களை சிறைப்பிடித்து
தான் பாதி தின்ற கனியை தின்னக் கொடுத்து
பெண்களாக மாற்றிக் கொண்டிருந்தான்.



Monday, March 22, 2010

நாய்க்குட்டியை வசியம் செய்தல்.

ஒரு நாய்க்குட்டியை
வசியப்படுத்துவதென்பது
ஒரு கலை.

முதலில் தாயோடு இருக்கும் குட்டிகளில்
செழிப்பானதொரு செவளையையோ
வெள்ளையையோ தெரியாமல்
கவர வேண்டும்.
கருப்புகள் வளர்ந்தபின்
வசீகரிப்பதில்லை,
எனவே அவை வேண்டா !

உங்கள் விட்டுக்கு வந்தபின்
கழுத்தில் சிறு மணி கோர்த்து
விலைஉயர்ந்த ஒரு
சங்கிலியில் கட்ட வேண்டும்.

பின்பு தனியாய் அது
தூங்கிக் கொண்டிருக்கும் போது
சீட்டி அடித்தோ சத்தம் செய்தோ
அதன் கவனத்தை உங்கள் பக்கம்
நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்

உங்களுக்கு பிடித்த ஒரு
செல்லப் பெயர் கொண்டு
அதைக் கொஞ்ச வேண்டும்
முதுகை தட்டிக் கொடுத்தல்,
சிற்சிறு முத்தங்கள்
சீக்கிரம் பலன் தரும்

இப்போது அது
உங்களைப் பர்த்தவுடன் வாலாட்டும்.
இந்த பருவம் மிக முக்கியம்
கொஞ்சம் சிரமம் பாராமல்
ரொட்டித் துண்டும், பாலும்
கொடுத்து பரிவுடன்
தடவிக் கொடுக்க வேண்டும்

இனி அது உங்களை
பார்த்தவுடன்
செல்ல சத்தம் எழுப்பி
காலைப் பிடித்துக் கொண்டு
விளையாட ஆரம்பிக்கும் - நீங்கள்
'ஷேக் ஹேண்ட்" கொடுக்க,
தாவி பந்தை பிடிக்க என
புதுப் புது விளையாட்டை
சொல்லிக் கொடுக்க வேண்டும்

அந்த குட்டி இனி உங்கள் வசம்
உங்கள் பார்வைக்கு, விரலசைவிற்கு
அடிமையாய் வாலாட்டி
எப்போதும் உங்களையே
சுற்றத் துவங்கி விடும்.

இப்போது,
நீங்கள் அதைக் கண்டு கொள்ளாமல்
உங்கள் வேலையை செய்ய வேண்டும்
உங்களை தொந்தரவு செய்து
எரிச்சல் படுத்துவது போல
குழையக் குழைய வலம் வரும் போது
எட்டி உதைத்து தள்ள வேண்டும்

நீங்கள் எத்தனை முறை தள்ளினாலும்
வாலாட்டிக் குழைவதை ஒரு போதும்
நிறுத்தாது அந்த அடிமை.
ஏனென்றால்,
உங்கள் வசியம் அப்படி.

இதே முறையை நீங்கள்,
பெண்களை வசியம்
செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

ஜாக்கிரதை !
ஒரு பூனைக் குட்டியை
வசியம் செய்ய
இந்த முறையை
பயன்படுத்தாதீர்கள்.

Friday, December 25, 2009

அன்பில்லா அண்ணனுக்கு! ( கவிதை- உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு)


சிட்டிபானை சோறு சமைத்து
உனக்குத்தான் முதலில் தருவேன்.
நீ என்னை கிள்ளி விட்டு
அழ வைத்து சிரித்திருப்பாய்.

நம் மதிப்பெண்களை ஒப்பிட்டு
என்னைப் பாராட்டும் மறுநாளே,
என் புதுப்பேனாவோ, புத்தகமோ
நிச்சயமாக தொலைந்திருக்கும்.
அப்பா என்னை திட்டும் போது
நீ யாருக்கும் தெரியாதென
மர்மப் புன்னகை பூத்திருப்பாய்.

கெஞ்சிக் கூத்தாடிய பிறகும், உன்
சைக்கிளை தொடக் கூட விட மாட்டாய்.
நானாக பழகும் போது, உதவ வந்த
பக்கத்து வீட்டு பையனை
ஏனோ வம்பிழுத்து அடித்து வைப்பாய்.

என்னை நீராட்டிய அன்று
நீயும் அடம்பிடித்து
புதுச்செயின் வாங்கிப் போட்டதை
பெருமையென நினைத்துக் கொண்டாய்,
என்னுள் உன்பிம்பம்
நொறுங்குவது தெரியாமல்.

உன் சுகதுக்கங்கள் உனக்கு.
தங்கையின் வயிற்று வலிக்கு
மாத்திரை வாங்குவது கேவலம்,
எதிர்வீட்டுப் பெண்ணின் நாய்க்கு
பவுடர் வாங்குவது மனிதாபிமானம்.

உன் நண்பர்கள் வரும்பொழுது நான்
அடுப்படி தாண்டி வெளியே வரக்கூடாது,
என் தோழிகள் உன் பார்வைக்கு பயந்தே
நம் வீட்டுக்கு வருவதும் கிடையாது.

என் முதல் தோழனாய்
உன்னைத் தான் நினைத்திருந்தேன்.
நீயோ ஒரே வீட்டில் வசிக்கும்
சக உயிரினமாய் கூட
என்னைக் கருதவில்லை.

இந்த பதினெட்டு வருடத்தின்
ஏதாவது ஒரு நொடியில்
என்னை நீ உணர்ந்திருந்தால்
இன்று எனக்கும் கூட தோன்றியிருக்கும்
படி தாண்டி போனபின்பு
என் அண்ணனும் தலைகுணிவானே என்று !

(கவிதை - உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு போட்டிக்காக)

Wednesday, May 27, 2009

இன்று உனக்காக நானடி!













நெற்றியில் முத்தமிட்டு, சூடான காஃபி...

ஆர்டின் வடிவத்தில் சுட்டுக் கொடுத்த தோசை...

இருவரும் சேர்ந்து துவைத்த சேலை...

கேட்டுக் கேட்டு, ஆர்வமாய் செய்த‌ அரைகுறை சமையல்...

தோளில் சாய்ந்து ரசித்துப் பார்த்த‌ ஐஸ்க்ரீம் சினிமா...

...............

எல்லா ஞாயிறும் தவறாமல், எப்படித்தான் ,

மேன்ஷன் அறைக்குள் நுழைகிறதோ

தடை செய்யப்பட்ட இந்த கனவு மட்டும்.

               பேசும் கவிதைகள் தொகுப்பிற்காக‌.