Thursday, March 11, 2010

தற்கொலை எனுமொரு நிகழ்வு

"உலகத்து நிதர்சனங்களை எதிர்கொண்டு போராட தைரியமில்லாமல் கோழைகள் எடுக்கும் நொடி நேர தவறான முடிவு" எனும் வாக்கியங்களை அநேகமாக எல்லா தற்கொலையின் இறுதி ஊர்வலங்களிலும் கொள்ளிச் சட்டிக்கும், பாடைக்கும் நடுவில் அலைந்து திரிவதை கண்டு கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் தற்கொலை என்பது தற்கொலை மட்டும் தானா?

தற்கொலை என்பது ஒரு கொலையும் தான் என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றி இருக்கிறதா? உங்களை நீங்களே ஒரு திண்ணையின் மேல் இருத்தி தோளில் ஒரு துண்டையும் போட்டுக் கொண்டு, நியாய அநியாங்களை அலசி, இப்படி செய்திருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம் என காலம் கடந்த யோசனைகள் கூறி, இறுதியில் இறந்தவனின் முதுகில் கொஞ்சம் பொறுப்பின்மையையும், கொஞ்சம் அறிவுரைகளையும் சேர்த்துக் கட்டி தீர்ப்பெழுதி விட்டு, வீட்டுக்குச் சென்று தலைமுழுகி, அரைத்து வைத்திருக்கும் வேப்பங்கொழுந்து சாற்றை குடித்து விட்டு அடுத்த தீர்ப்புக்குத் தயாராகுமுன், ஒருநொடி, ஒரே ஒரு நொடி அவனாக, அதாவது இறந்தவனாக இருந்து பார்த்திருக்கிறீர்களா ? நான் இருந்திருக்கிறேன்.

தாமதிக்கப்படாமல் இருந்திருந்தால் அந்த நொடி என்னை ஆரத்தழுவி சென்றிருக்கும். பார்த்தீர்களா, உடனே தீர்ப்பெழுத தயாராகுகிறீர்களே, கொஞ்சம் பொறுங்கள். எனக்கு உங்களது பச்சாதாபமோ, உளுத்துப் போன அறிவுரைகளோ தேவையில்லை. தற்கொலை எண்ணம் தோன்றிய அந்த மரண நொடிகளை நான் முழுமையாகவே அனுபவித்திருக்கிறேன். அதே போல் அந்த எண்ணம் சட்டென மறைந்து காற்றில் கரைந்து போகும் அடுத்த நொடியையும் அதே முழுமையோடு அனுபவித்திருக்கிறேன். அவ்வாறு அந்த அடுத்த நொடிக்காக காத்திருக்காமல், அல்லது அடுத்த நொடி அடுத்து வருவது தெரியாமல் இறந்து விட்ட, இதோ இன்று உங்களுக்கு தற்காலிக பேசுபொருளாய் மாறி இருக்கும் இவன், இறந்து போயிருக்கும் இவனும் நான் தான். தற்கொலைக்கான நொடியை கடக்க முடியாத நான்.

உங்களுக்கு இப்போது என்னைப் பார்த்து ஒரு ஏளனப்புன்னகை வருகிறது. நீங்கள் உங்களை சாதனை புரிந்து வெற்றி பெற்றவராகவும், என்னை நிதர்சனங்களை நேருக்கு நேர் எதிர் கொண்டு வெற்றி பெறமுடியாமல் புறமுதுகிட்டு மரணம் நோக்கி ஓடும் தோல்வியாளனாகவும் எண்ணிக் கொள்கிறீர்கள். நானும் வெற்றி என்னும் வெறியில் சுவைத்துத் திளைத்தவன் தான் என்பதை சுலபமாக மறந்து விடுகிறீர்கள் அல்லது பொறாமையுடன் மறைத்து விடுகிறீர்கள். இல்லை அது உங்களுக்குத் தெரியாது, சொல்லிப் புரிய வைக்கும் எண்ணமும் எனக்கில்லை, நீங்கள் உங்களது தீர்ப்புகளைத் தொடருங்கள். நீங்கள் நானாக ஆகும் நாள் வரும் போது என்னை நினைத்துக் கொள்வீர்கள் அல்லது வாழ்க்கை முழுதும் மேலோட்டமாகவே இருந்து கொண்டு, "தற்கொலையிலிருந்து தப்பிக்க 101 வழிகள்" என்று தன்னம்பிக்கை கட்டுரை எழுதி, போவோர் வருவோர் அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டிருப்பீர்கள்.

இது என் வாழ்க்கை
இதன் ஆழ அகலங்கள்
புரையோடிப்போன காயங்கள்
குரூர வலி
துரோகம்
இயலாமை
தனிமை
அவமானம்
எனக்கு மட்டுமே தெரியும்.
எரிந்து கொண்டிருக்கும்
என் சடலத்தின் மீது
தீர்ப்பெழுதிப் போகும்முன்
உங்களை நானாக நினைத்துப் பாருங்கள்,
இல்லை அது முடியாது...
கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்,
என்னை முழுமையாக எரியவிடுங்கள்.


000O000