Friday, May 8, 2009

கனவுகள் விற்பனைக்கு !



" நான் மனிதன், ஒரு வண்ணத்துப்பூச்சியாய் உருமாறியதாய் கனவு காண்கிறேன். அல்லது நான் வண்ணத்துப்பூச்சி, ஒரு மனிதனாய் உருமாறியதாய் கனவு கண்டுகொண்டு இருக்கிறேன் "

 

 இந்த வரிகளை எங்கேயோ படித்த பொழுது, நாம் வாழ்கின்ற இந்த வாழ்வு, அப்படியே கனவாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்கத் தோன்றியது. அல்லது இன்று இரவு கனவுக்குள் சென்று ஒரு வாழ்வை தேர்ந்தெடுத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் வந்தது. மனம் குதூகலிக்கும் வேளையில் வாழ்வை அப்படியே உறைந்து போக வேண்டுவதும், துவண்டு போகும் வேளையில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் அப்படியே அழித்துவிட்டு புதிதாய் துவங்கிவிட வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த சாத்தியக் கூறுகள் வாழ்வில் இல்லாவிட்டலும், கனவுகளில் நிரம்ப நிரம்பக் கிடைப்பதாகவே எப்பொழுதும் உணர்கிறேன்.

 

மரங்கள் அடர்ந்த வனம், மெலிதாய் வீசும் இளங்காலை தென்றல், பெயர் தெரியாத பறவைகளின் சத்தம், சிற்சிறிய குன்றுகளையும், அருவிகளையும் தாண்டித் தாண்டி இலக்கற்ற ஒரு பயணம். இப்படி ஒரு கனவினூடே அலாரச் சத்தத்தில் துடித்தெழுந்து அறையோரத்து அழுக்குக் கூடையையும், கழிவறை வரிசையையும் தாண்டி கசகசக்கும் கழுத்துப்பட்டையையும், இடுப்புபட்டையையும் இறுக்கிக் கொண்டு காய்ந்த ரொட்டியை ஊறவைத்துத் தின்னும் போதெல்லாம் நினைக்கின்றேன்...... " கனவுக்குள்ளேயே சென்று வாழ வழி இருக்கிறதா ? " என்று.

 

ஓர் இரவு கனவில், ஒரு விசித்திரமான வியாபாரம் .... பயமும், சிலிர்ப்பும், கூச்சமும், வெறியும், பக்தியும், மோகமும், சாகசமும், புலம்பலும், சிறியதும், பெரியதுமாக இப்படி ஏகப்பட்ட கனவுகள் விற்பனைக்கு.... எந்தக் கனவு வேண்டுமோ, அந்த கனவுக்குள் சென்று வாழ்ந்து பார்த்து பிடித்திருந்தால் வாங்கிச் செல்லலாம். ஆச்சரியமும், எதிர்பார்ப்பும் தொற்றிக் கொள்ள, "ஒரு கனவு வாங்குவதற்கு எத்தனை வாழ்க்கையை வேண்டுமானாலும் இலவசமாய் முயன்று பார்க்கலாம் " என்ற விளம்பரமும் கவரவே, ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை எனும் கனவுக்குள் நுழைந்தேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு புழுவாய் நெளிந்து கொண்டிருந்தேன்.... இன்னும் கொஞ்சம் நேரம் தான், பிறகு சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மூச்சு முட்டி, இருட்டறைக்குள் தள்ளுவது போன்று ஒரு உணர்வு. ஏதோ பயம் தொற்றிக் கொள்ள பதறிப் போய், " வேண்டாம், நான் சிட்டுக் குருவியின் கனவை முயற்ச்சிக்கிறேன், இது வேண்டாம் !" என கதற..... வெளியே இருந்து ஏதோ சத்தம்... " இந்த வண்ணத்துப்பூச்சியின் வாழ்வை முடித்து விட்டு வா, பிறகு சிட்டுக் குருவியாகலாம் !" நானும் வேறு வழியின்றி சிட்டுக்குருவின் கனவை சுமந்து கொண்டு வண்ணத்துப்பூச்சி வாழ்கையின் துவக்கத்தில் .........................."

 

கனவு கலைந்து, முழித்துப் பார்த்தால்.... என் முதுகில் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் முளைத்து இருப்பது போன்ற உணர்வு.

"டீ சாப்பிடப் போகலாமா ?" என்று அறை நண்பன் கேட்கும் போது தான் சுய நினைவு வந்தது... படுத்திருந்த பாய், தலையணையுடன் சேர்த்து கனவையும் அறையின் ஓரமாக சாய்த்து வைத்து விட்டு தேநீர் குடிக்கக் கிளம்பினேன்.... ம்ம்ம், இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருந்தால் மகரந்தத்துடன் தேன் குடித்திருக்கலாம்.