Thursday, March 11, 2010

தற்கொலை எனுமொரு நிகழ்வு

"உலகத்து நிதர்சனங்களை எதிர்கொண்டு போராட தைரியமில்லாமல் கோழைகள் எடுக்கும் நொடி நேர தவறான முடிவு" எனும் வாக்கியங்களை அநேகமாக எல்லா தற்கொலையின் இறுதி ஊர்வலங்களிலும் கொள்ளிச் சட்டிக்கும், பாடைக்கும் நடுவில் அலைந்து திரிவதை கண்டு கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் தற்கொலை என்பது தற்கொலை மட்டும் தானா?

தற்கொலை என்பது ஒரு கொலையும் தான் என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றி இருக்கிறதா? உங்களை நீங்களே ஒரு திண்ணையின் மேல் இருத்தி தோளில் ஒரு துண்டையும் போட்டுக் கொண்டு, நியாய அநியாங்களை அலசி, இப்படி செய்திருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம் என காலம் கடந்த யோசனைகள் கூறி, இறுதியில் இறந்தவனின் முதுகில் கொஞ்சம் பொறுப்பின்மையையும், கொஞ்சம் அறிவுரைகளையும் சேர்த்துக் கட்டி தீர்ப்பெழுதி விட்டு, வீட்டுக்குச் சென்று தலைமுழுகி, அரைத்து வைத்திருக்கும் வேப்பங்கொழுந்து சாற்றை குடித்து விட்டு அடுத்த தீர்ப்புக்குத் தயாராகுமுன், ஒருநொடி, ஒரே ஒரு நொடி அவனாக, அதாவது இறந்தவனாக இருந்து பார்த்திருக்கிறீர்களா ? நான் இருந்திருக்கிறேன்.

தாமதிக்கப்படாமல் இருந்திருந்தால் அந்த நொடி என்னை ஆரத்தழுவி சென்றிருக்கும். பார்த்தீர்களா, உடனே தீர்ப்பெழுத தயாராகுகிறீர்களே, கொஞ்சம் பொறுங்கள். எனக்கு உங்களது பச்சாதாபமோ, உளுத்துப் போன அறிவுரைகளோ தேவையில்லை. தற்கொலை எண்ணம் தோன்றிய அந்த மரண நொடிகளை நான் முழுமையாகவே அனுபவித்திருக்கிறேன். அதே போல் அந்த எண்ணம் சட்டென மறைந்து காற்றில் கரைந்து போகும் அடுத்த நொடியையும் அதே முழுமையோடு அனுபவித்திருக்கிறேன். அவ்வாறு அந்த அடுத்த நொடிக்காக காத்திருக்காமல், அல்லது அடுத்த நொடி அடுத்து வருவது தெரியாமல் இறந்து விட்ட, இதோ இன்று உங்களுக்கு தற்காலிக பேசுபொருளாய் மாறி இருக்கும் இவன், இறந்து போயிருக்கும் இவனும் நான் தான். தற்கொலைக்கான நொடியை கடக்க முடியாத நான்.

உங்களுக்கு இப்போது என்னைப் பார்த்து ஒரு ஏளனப்புன்னகை வருகிறது. நீங்கள் உங்களை சாதனை புரிந்து வெற்றி பெற்றவராகவும், என்னை நிதர்சனங்களை நேருக்கு நேர் எதிர் கொண்டு வெற்றி பெறமுடியாமல் புறமுதுகிட்டு மரணம் நோக்கி ஓடும் தோல்வியாளனாகவும் எண்ணிக் கொள்கிறீர்கள். நானும் வெற்றி என்னும் வெறியில் சுவைத்துத் திளைத்தவன் தான் என்பதை சுலபமாக மறந்து விடுகிறீர்கள் அல்லது பொறாமையுடன் மறைத்து விடுகிறீர்கள். இல்லை அது உங்களுக்குத் தெரியாது, சொல்லிப் புரிய வைக்கும் எண்ணமும் எனக்கில்லை, நீங்கள் உங்களது தீர்ப்புகளைத் தொடருங்கள். நீங்கள் நானாக ஆகும் நாள் வரும் போது என்னை நினைத்துக் கொள்வீர்கள் அல்லது வாழ்க்கை முழுதும் மேலோட்டமாகவே இருந்து கொண்டு, "தற்கொலையிலிருந்து தப்பிக்க 101 வழிகள்" என்று தன்னம்பிக்கை கட்டுரை எழுதி, போவோர் வருவோர் அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டிருப்பீர்கள்.

இது என் வாழ்க்கை
இதன் ஆழ அகலங்கள்
புரையோடிப்போன காயங்கள்
குரூர வலி
துரோகம்
இயலாமை
தனிமை
அவமானம்
எனக்கு மட்டுமே தெரியும்.
எரிந்து கொண்டிருக்கும்
என் சடலத்தின் மீது
தீர்ப்பெழுதிப் போகும்முன்
உங்களை நானாக நினைத்துப் பாருங்கள்,
இல்லை அது முடியாது...
கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்,
என்னை முழுமையாக எரியவிடுங்கள்.


000O000

Friday, December 25, 2009

அன்பில்லா அண்ணனுக்கு! ( கவிதை- உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு)


சிட்டிபானை சோறு சமைத்து
உனக்குத்தான் முதலில் தருவேன்.
நீ என்னை கிள்ளி விட்டு
அழ வைத்து சிரித்திருப்பாய்.

நம் மதிப்பெண்களை ஒப்பிட்டு
என்னைப் பாராட்டும் மறுநாளே,
என் புதுப்பேனாவோ, புத்தகமோ
நிச்சயமாக தொலைந்திருக்கும்.
அப்பா என்னை திட்டும் போது
நீ யாருக்கும் தெரியாதென
மர்மப் புன்னகை பூத்திருப்பாய்.

கெஞ்சிக் கூத்தாடிய பிறகும், உன்
சைக்கிளை தொடக் கூட விட மாட்டாய்.
நானாக பழகும் போது, உதவ வந்த
பக்கத்து வீட்டு பையனை
ஏனோ வம்பிழுத்து அடித்து வைப்பாய்.

என்னை நீராட்டிய அன்று
நீயும் அடம்பிடித்து
புதுச்செயின் வாங்கிப் போட்டதை
பெருமையென நினைத்துக் கொண்டாய்,
என்னுள் உன்பிம்பம்
நொறுங்குவது தெரியாமல்.

உன் சுகதுக்கங்கள் உனக்கு.
தங்கையின் வயிற்று வலிக்கு
மாத்திரை வாங்குவது கேவலம்,
எதிர்வீட்டுப் பெண்ணின் நாய்க்கு
பவுடர் வாங்குவது மனிதாபிமானம்.

உன் நண்பர்கள் வரும்பொழுது நான்
அடுப்படி தாண்டி வெளியே வரக்கூடாது,
என் தோழிகள் உன் பார்வைக்கு பயந்தே
நம் வீட்டுக்கு வருவதும் கிடையாது.

என் முதல் தோழனாய்
உன்னைத் தான் நினைத்திருந்தேன்.
நீயோ ஒரே வீட்டில் வசிக்கும்
சக உயிரினமாய் கூட
என்னைக் கருதவில்லை.

இந்த பதினெட்டு வருடத்தின்
ஏதாவது ஒரு நொடியில்
என்னை நீ உணர்ந்திருந்தால்
இன்று எனக்கும் கூட தோன்றியிருக்கும்
படி தாண்டி போனபின்பு
என் அண்ணனும் தலைகுணிவானே என்று !

(கவிதை - உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு போட்டிக்காக)

Thursday, June 4, 2009

தொலைபேசி (சிறுகதை - உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு)

தொலைபேசி (சிறுகதை)



தொலைதொடர்பு துறை அதிகாரிகளின் அவசரக் கூட்டம். 

"ஒரு மாசத்துக்குள்ள எல்லாம், கண்டிப்பா முடியாதுங்க. அந்த மலைபிரதேசத்து கிராமத்த்ற்குப் போக வர சரியான ரோடு வசதி கூட இல்லை. எப்போ மழை பெய்யும், பாறை உருளும்னு தெரியாது. இந்த நிலைமைல எப்படி போய் வேலை பார்க்குறது?"

 "ஏன்யா, நிலைமை புரியாம உயிரை வாங்குறீங்க, இது மத்திய தொலைதொடர்பு அமைச்சரோட நேரடி உத்தரவு. நம்ம துறைக்கு விடப்பட்ட சவாலா எடுத்து சிறப்பா முடிக்கனும்." 

"அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்திற்கு அந்த கிராமத்துக்கு போனாராம். அந்த மக்களுக்கு தொலைபேசி வசதி வேண்டும்னு முடிவு பண்ணாராம், இதுல ஏதோ உள்குத்து இருக்குங்க."

 "அதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விஷயம். எப்படி வேலையை ஆரம்பிக்கிறதுன்னு மட்டும் சொல்லுங்க. யாரெல்லாம் போக ரெடியா இருக்கீங்க?"

 "அவ்வளவு முக்கியம்னா, பொண்டாட்டி பிள்ளைங்களை விட்டுட்டு, ஒரு மாசம் அந்த குளிர்ல டெண்ட் அடிச்சு நீங்க போய் தொலைபேசி நிலையத்தை நிறுவிட்டு வாங்க."

 "மலையில குன்றும், பள்ளமும் இல்லாம இருந்தாக்கூட பரவால்ல, செல் இனைப்பு கொடுத்துறலாம் அதுக்கும் வழியில்லை. மலை முழுதும் ட்ரம் உருட்டி கேபிள் போடுறதுக்குள்ள தாலி அறுந்துறும்."

 "டெக்னிக்கலி நாட் ஃபீசிபில் (Technically not feasible) ரிபோர்ட் கொடுத்துறலாம் சார், வேற வழியில்லை." 

மீட்டிங் ஒரு முடிவுக்கும் வராமல் சலசலப்புடன் தொடர்ந்து கொண்டிருக்க,

 "இல்ல சார், ஒரு ஸ்ட்ராங் டீம் உருவாக்கினா நிச்சயமா நம்மால முடிக்க முடியும். ஏற்கனவே தனியார் தொலைபேசிகளோட வரவால நம்ம துறையோட பெயர் டவுன் ஆகிட்டு இருக்கு. இந்த டாஸ்க்கை நம்ம முடிச்சா, ஐ.டி. மினிஸ்டரே நேரடியா வந்து சேவையை துவங்கி வைப்பார். அப்போ பெயர் தெரியாத மலை கிராமத்துல நாம தொலைதொடர்பு ஏற்படுத்தி இருக்கோம்னு  நாடு முழுதும் நல்ல ரீச் கிடைக்கும். நம்ம துறை மேல, நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அதிகரிச்சா போதும், நிச்சயம் பாஸிடிவ் க்ரோத் காமிக்கலாம்."

 குரல் வந்த திசை நோக்கி அனைவரும் திரும்பிப் பார்த்தனர். சொன்னவர்.... சொன்னவன் இளைஞன். மற்றவர்கள் தலை தப்பியது என்று ஒதுங்கிக் கொள்ள, அவன் தலைமையில் 25 பேர் கொண்ட "டாஸ்க் ஃஃபோர்ஸ்" அமைக்கப்பட்டது.

 அடுத்த இரண்டாவது நாள், தொலைபேசி நிலையம் அமைப்பதற்கான அனைத்து உபகரணங்கள், தொழில் நுட்ப சாதனங்களுடன் அந்தக் குழு மலையேறியது. உற்சாகமாக தலைமையேற்று கிளம்பினான், அவன்.

 கடல்மட்டதிலிருந்து 7000 அடி உயரம். சுற்றுலா பயணிகள் இன்னும் எட்டிப் பார்க்காத அழகான மலைப் பிரதேசம். மலை முழுதும் இயற்கை விவசாயம் செழித்துக் கிடக்க, குன்றுகளையும், அருவிகளையும் தாண்டிய குளிர் பயணம்.

 சாலை வசதியில்லை, சுகாதரமான உணவு முறை இல்லை, இரவானால் பெயர் தெரியாத விலங்குகளின் நடமாட்டம், கடுமையான குளிர், அனைத்தையும் தாண்டி அந்த குழுவிற்குள் ஒரு ஒற்றுமையும், நட்புணர்வும், செயல்முனைப்பும் துளிர்விட்டது. அது வேலையில் உற்சாகத்தைக் கொடுத்தது. 

லைன் ஆஃப் சைட் (Line of Sight) பார்த்து, டவர் எழுப்பி, தொலைபேசி நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்து, ஸ்விட்ச்சிங் சாதனங்களை முறைமைப்படுத்தி, உள்ளூர் ஆட்களைப் பிடித்து கூலி பேசி, மலை நெடுக பள்ளம் தோண்டி, கேபிள் பதித்து, ஜம்பர் அடித்து..... 15 நாளில் கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டி இருந்தார்கள். 

அன்று, தொலைபேசி நிலைய உட்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த அவன், ஊர் மக்களின் குரல் கேட்டுத் திரும்பினான்.

 "ஐயா, கேட்கோம்னு தப்பா எடுத்துக்காதீக, சம்பளம் வாங்கீட்டுத் தானேய்யா எல்லாரும் வேலை பார்க்கீக, பின்ன எதுக்குய்யா ஒரு இணைப்புக்கு தனியா ஆயிரம் ரூவா கேட்கீக!"

 கன்னத்தில் பளாரென அறைந்தது போலிருந்த்தது அவனுக்கு.

 "யாருங்க, உங்ககிட்ட பணம் கேட்டது?"

 "நீங்க கேட்டதாச் சொல்லித்தான், உங்கூட இருக்க ரெண்டு பேரு வீடு வீடா வந்து கேட்டாக!" 

"அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நீங்க ஒவ்வொரு இணைப்புக்கும் நூறு ரூபா கட்டி ரசீது வச்சிருக்கீங்கல்ல, அதுக்கு மேல யார் கேட்டாலும் ஒரு பைசா கூட கொடுக்காதீங்க.உங்க கிட்ட கேட்டவுங்களை நான் தகுந்த முறையில் விசாரிக்கிறேன்." 

அதே போல விசாரித்து, தவறில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை குழுவிலிருந்து நீக்கி திருப்பி அனுப்பினான்.

 மறுநாள் பணிகளை மேற்பார்வையிட உயர் அதிகாரிகள், அந்த மலைபிரதேசத்து கிராமத்திற்கு வந்தனர்.

 "பண்ண வரை சரி தான். ஆன வேலை இன்னும் சீக்கிரமா நடக்கனும். அமைச்சர் திறப்பு விழாவிற்கு தேதி கொடுத்துட்டார். இன்னும் ஒரு வாரத்துல நம்ம சைடு வொர்க்கை முடிச்சாத் தான் சரியா இருக்கும்."

 "முடிச்சிடுவோம் சார், ஹாஃப் வே க்ராஸ்டு, இன்னும் சப் என்ட் கனெக்ஸன் மட்டும் தான் பாக்கி." 

"ஓ.கே. யங் மேன். யுவர் டீம் வில் ரிசீவ் ய க்ரேட் அப்ரிஸியேஸ்ன் ஃஃப்ரம் மினிஸ்டர்." (o.k. young man, your team will receive a great appreciation from minister)

 "தேங்க்யூ சார்!"

 உயர் அதிகாரிகள் குழு விடைபெற்ற்து.

 சரியாக பத்தாவது நாள், மத்திய தொலைதொடர்பு அமைச்சரின் வருகையை எதிர்நோக்கி அந்த கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்த்தது. 

தொலைதொடர்புத் துறையின் உயர் அதிகாரிகளும் , உயர் உயர் அதிகாரிகளும்  அமைச்சருக்கு சால்வை அணிவித்து புண்ணியம் தேடிக் கொள்ள வரிசையில் காத்திருந்தனர்.

 ஊடகங்களும், செய்தித்தாள்களும், சுவரொட்டிகளும் அமைச்சரின் தொலைதொடர்பு கொள்கைகளை வெகுவாக புகழ்ந்து கொண்டிருந்த்தன. 150வருட தொலைதொடர்புத் துறையின் வளர்ச்சி முழுவதையும் அமைச்சரின் சாதனைகளாக பட்டியலிட்டுக் கொண்டிருந்தன.

 அமைச்சரின் வருகையை ஒட்டியும், வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டியும், மலைப்பிரதேசத்து வீடுகள் தோறும் ஆயிரம் ரூபாய் உள்ள கவர் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அன்று புகார் கூறிய கிராம மக்கள் அனைவரும் புன்முறுவலோடு பணத்தை பெற்றுக் கொண்டிருந்தனர். 

அமைச்சர் வந்தார், வரும்வழியில் அந்த மலைபிரதேசத்தில் புதிதாக தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த நூறு ஏக்கர் விவசாயத் தோட்டத்தைப் பார்வையிட்டார். நடுவில் அமைந்துள்ள பண்ணைவீட்டு பங்களாவின் புதிய தொலைபேசி இணைப்பைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டார்.

 பிறகு, தொலைபேசி நிலையத்தைத் திறந்து வைத்து, தொலைதொடர்பு சேவையை நாட்டு மக்களுக்கு அர்பணித்தார். மைக்குடன் இணைக்கப்பட்டிருந்த   தொலைபேசியை எடுத்து  முதல் உரையாடலை துவங்கினார்.

 "தாய்மார்களே... பெரியோர்களே.... நம் அரசு ஏழை எளிய மக்களுக்கு தொலைதொடர்பு ஏற்படுத்திய அரசு. எனவே உங்கள் பொன்னான வாக்குகளை ................"

 முதல் தொலைபேசி உரையாடல் அந்த கிராமம் தாண்டி மலைகளெங்கும் ஓங்கி ஒலித்தது. 

அப்போது, 

அந்த பெயர் தெரியாத மலைபிரதேசத்து கிராமத்தில், நேற்று வரை டெண்ட் அடித்து, போராடிக் கொண்டிருந்த அந்த 21 பேரும், வழக்கம் போல‌ தங்கள் அலுவலகத்தில் காலை ஒன்பது மணிக்கு வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு பயணப்படி, பஞ்சப்படி பாரங்களை நிரப்பிக் கொண்டு வரிசையில் காத்திருந்தனர்.

("உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு" நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)