Friday, May 8, 2009

கனவுகள் விற்பனைக்கு !



" நான் மனிதன், ஒரு வண்ணத்துப்பூச்சியாய் உருமாறியதாய் கனவு காண்கிறேன். அல்லது நான் வண்ணத்துப்பூச்சி, ஒரு மனிதனாய் உருமாறியதாய் கனவு கண்டுகொண்டு இருக்கிறேன் "

 

 இந்த வரிகளை எங்கேயோ படித்த பொழுது, நாம் வாழ்கின்ற இந்த வாழ்வு, அப்படியே கனவாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்கத் தோன்றியது. அல்லது இன்று இரவு கனவுக்குள் சென்று ஒரு வாழ்வை தேர்ந்தெடுத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் வந்தது. மனம் குதூகலிக்கும் வேளையில் வாழ்வை அப்படியே உறைந்து போக வேண்டுவதும், துவண்டு போகும் வேளையில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் அப்படியே அழித்துவிட்டு புதிதாய் துவங்கிவிட வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த சாத்தியக் கூறுகள் வாழ்வில் இல்லாவிட்டலும், கனவுகளில் நிரம்ப நிரம்பக் கிடைப்பதாகவே எப்பொழுதும் உணர்கிறேன்.

 

மரங்கள் அடர்ந்த வனம், மெலிதாய் வீசும் இளங்காலை தென்றல், பெயர் தெரியாத பறவைகளின் சத்தம், சிற்சிறிய குன்றுகளையும், அருவிகளையும் தாண்டித் தாண்டி இலக்கற்ற ஒரு பயணம். இப்படி ஒரு கனவினூடே அலாரச் சத்தத்தில் துடித்தெழுந்து அறையோரத்து அழுக்குக் கூடையையும், கழிவறை வரிசையையும் தாண்டி கசகசக்கும் கழுத்துப்பட்டையையும், இடுப்புபட்டையையும் இறுக்கிக் கொண்டு காய்ந்த ரொட்டியை ஊறவைத்துத் தின்னும் போதெல்லாம் நினைக்கின்றேன்...... " கனவுக்குள்ளேயே சென்று வாழ வழி இருக்கிறதா ? " என்று.

 

ஓர் இரவு கனவில், ஒரு விசித்திரமான வியாபாரம் .... பயமும், சிலிர்ப்பும், கூச்சமும், வெறியும், பக்தியும், மோகமும், சாகசமும், புலம்பலும், சிறியதும், பெரியதுமாக இப்படி ஏகப்பட்ட கனவுகள் விற்பனைக்கு.... எந்தக் கனவு வேண்டுமோ, அந்த கனவுக்குள் சென்று வாழ்ந்து பார்த்து பிடித்திருந்தால் வாங்கிச் செல்லலாம். ஆச்சரியமும், எதிர்பார்ப்பும் தொற்றிக் கொள்ள, "ஒரு கனவு வாங்குவதற்கு எத்தனை வாழ்க்கையை வேண்டுமானாலும் இலவசமாய் முயன்று பார்க்கலாம் " என்ற விளம்பரமும் கவரவே, ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை எனும் கனவுக்குள் நுழைந்தேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு புழுவாய் நெளிந்து கொண்டிருந்தேன்.... இன்னும் கொஞ்சம் நேரம் தான், பிறகு சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மூச்சு முட்டி, இருட்டறைக்குள் தள்ளுவது போன்று ஒரு உணர்வு. ஏதோ பயம் தொற்றிக் கொள்ள பதறிப் போய், " வேண்டாம், நான் சிட்டுக் குருவியின் கனவை முயற்ச்சிக்கிறேன், இது வேண்டாம் !" என கதற..... வெளியே இருந்து ஏதோ சத்தம்... " இந்த வண்ணத்துப்பூச்சியின் வாழ்வை முடித்து விட்டு வா, பிறகு சிட்டுக் குருவியாகலாம் !" நானும் வேறு வழியின்றி சிட்டுக்குருவின் கனவை சுமந்து கொண்டு வண்ணத்துப்பூச்சி வாழ்கையின் துவக்கத்தில் .........................."

 

கனவு கலைந்து, முழித்துப் பார்த்தால்.... என் முதுகில் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் முளைத்து இருப்பது போன்ற உணர்வு.

"டீ சாப்பிடப் போகலாமா ?" என்று அறை நண்பன் கேட்கும் போது தான் சுய நினைவு வந்தது... படுத்திருந்த பாய், தலையணையுடன் சேர்த்து கனவையும் அறையின் ஓரமாக சாய்த்து வைத்து விட்டு தேநீர் குடிக்கக் கிளம்பினேன்.... ம்ம்ம், இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருந்தால் மகரந்தத்துடன் தேன் குடித்திருக்கலாம்.

Wednesday, May 6, 2009

சுழியம் .... இல்லாததன் துவக்கம்

துவங்காமல் இருக்கும் ஒரு செயலோ , திறக்காமல் இருக்கும் பொருளோ எப்போதும் நம்மை வசீகரிக்கவே செய்கிறது..... போலவே, ஒன்றுமில்லாததைக் குறிக்கும் சுழியமும், ஏதோ அனைத்தையும் தனக்குள்ளே அடக்கி வைத்துக் கொண்டு , நிசப்த்தமாய் இருப்பது போலவே உணர்கிறேன்.... இல்லாததை கையில் வைத்திருக்கும் வெறுமையின் போது கூட , எல்லாவற்றையும் மனதில் நிறைத்திருப்பதாய் புன்னகைக்கும் குழந்தையைப் போல.

மஞ்சளும், பச்சையும், சிகப்புமாய் சிதறிக்கிடக்கிறது திரை முழுதும், புண்ணிய நதியில் ஊதிப் பெருத்து மிதந்து வரும் பிணங்களையும், தீயில் குளிக்கின்ற போராளியின் உயிராயுதத்தையும், நடிகைகளின் அங்க அமைப்புகளையும் விரலசைவுகளில் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம். நேரம் நெருங்குகையில் விளையாட்டை நிறுத்தி விட்டு, மின்சாரம் இல்லாமல் இரவு தூங்க வேண்டிய கொடுமையை நொந்த படி அட்டையை தேய்த்துவிட்டு வெளியேறுகிறோம். பதறவும், சிதறவும், சிறகடிக்கவும் செய்யும் நிகழ்வுகள் எல்லாம் இரண்டடி தூரத்தில் நிகழ்ந்தது போன்ற பிம்பத்தைத் தாண்டி நிற்காமல் செல்லப்போகின்ற பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது இந்த இணைய வலை எல்லாம் சுழியமாகத் தான் தெரிகின்றது.

ஏதேதோ பேசுகின்றோம், இருப்பை நிலைநிறுத்த ஏதேதோ எழுதுகின்றோம், இல்லையென்றாலும் ஏதோ ஒன்றை உருவாக்க முயற்சித்து, முடியாவிட்டால் இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி, பெருமிதப் பார்வையை படர விட்டு மகிழ்கின்றோம். மகிழ்ச்சியின் எல்லையில் மாற்றங்கள் தேவைப்படும் போது பழையதை அழித்து விட்டு, புதிய முகமூடியை அணிந்து கொண்டு மீண்டும் சுழியத்திலிருந்து தொடங்குகின்றோம்.

துவங்காமல் இருக்கும் அல்லது துவங்கத் தயாராகக் காத்திருக்கும் சுழியத்திலிருந்து எண்ணிக்கை ஏதுமற்ற அல்லது எண்ணிக்கை அனைத்தையும் கடந்த சுழியம் நோக்கி எழுதுறேன்.......... அனைவருக்கும் வணக்கங்கள் !!!