Showing posts with label யானை. Show all posts
Showing posts with label யானை. Show all posts

Sunday, May 10, 2009

தோற்றமயக்கம்

முரட்டு மீசை, தேர்ந்த உடை அணிந்த கம்பீர தோற்றமுடைய ஒரு ஆறடி உயர நபர், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் கொண்டாட்ட மனநிலையில் உணவருந்தி விட்டு வரும் உணவக வாயிலில் உங்களுக்கு ராயல் சல்யூட் அடித்துவிட்டு, ஒரு இரண்டு ரூபாய்க்காக காத்திருக்கும் போது எப்படி உணர்வீர்கள் ?


துவக்கப் பள்ளி செல்லும் பருவத்தில், கண்கள் விரிந்து பிரமிப்புடன் முதன்முதலாய் பார்த்தது யானையைத் தான். பத்து அடி அகலமுள்ள எங்கள் தெருவில் யானை வரும் போதெல்லாம் ஒரு விழாக்கோலம் போலவே காட்சியளிக்கும். மக்கள் தமது வீட்டின் முன் நிற்கும் மிதிவண்டிகளை சுவருடன் சாத்தி ஓரம்கட்டுவர், தெருமுனையில் இட்லி கடை வைத்திருப்பவர் வேகமாக கடையை ஒதுக்குவார், தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் வேகமாக ஓடி வந்து கதவுக்குப் பின் ஒளிந்து ஓரக் கண்ணால் யானையின் ரவை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருப்பர். யானை தெருவுக்குள் நுழையும் போது, நகர்வலம் வருகின்ற அரசனைப் போலத் தோன்றும். ஆடி அசைந்து நகர்ந்து வருவதைப் பார்க்கும் போது "எல்லாம் எனக்குத் தெரியும்" என்ற இறுமாப்புடன் நடந்து செல்வதாகவே தோன்றும். அந்த வயதில் படிந்த படிமம் அப்படியே நிலைத்து விட்டது. யானையைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம் பிரமிப்பும், நகர்வலமும் கூடவே நினைவிலாடும்.


கல்லூரிப் பருவத்தில் ஒரு விடுமுறையில் வீட்டுக்குச் சென்றிருந்த போது, யானை வருவதாய் கூச்சலிட்டுக் கொண்டு, பக்கத்துக்கு வீட்டு சிறுவர்கள் எங்கள் வீட்டு கதவுகளுக்குப் பின் ஒளிந்து கொண்டனர். எனக்கும் ஆர்வம் வரவே, வெளியே சென்று எட்டிப் பார்த்தேன். துதிக்கையை தூக்கியபடி வணக்கம் செலுத்தி ஒவ்வொரு வீடாய் பிச்சையெடுத்து வந்து கொண்டிருந்தது. ஏனோ அன்று எனக்கு அரசனும், நகர்வலமும், கம்பீரமும் எதுவும் தோன்றவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக பிச்சையெடுக்கப் பழக்கப் பட்ட ஒரு அப்பாவி ஜீவனாவே தோன்றியது. யானையைப் பற்றிய மொத்த பிம்பமும் உடைந்த நாளது. பிரமிப்பு முழுதாய் நீங்கி, பரிதாபமே மேலோங்கியது. என்னை நோக்கி வரும் அந்த ஜீவனை நேர்கொள்ள தைரியம் இல்லாமல், தலை கவிழ்ந்தவாறு என் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டேன்.

இன்றும் அப்படித் தான், உணவகத்திலிருந்து வெளிவரும் போது, எனக்கு ராயல் சல்யூட் அடித்தவரை நேர்கொள்ள தைரியமின்றி, தலை கவிழ்ந்தபடி வெளியேறி விடுகிறேன்.