தொலைபேசி (சிறுகதை)
தொலைதொடர்பு துறை அதிகாரிகளின் அவசரக் கூட்டம்.
"ஒரு மாசத்துக்குள்ள எல்லாம், கண்டிப்பா முடியாதுங்க. அந்த மலைபிரதேசத்து கிராமத்த்ற்குப் போக வர சரியான ரோடு வசதி கூட இல்லை. எப்போ மழை பெய்யும், பாறை உருளும்னு தெரியாது. இந்த நிலைமைல எப்படி போய் வேலை பார்க்குறது?"
"ஏன்யா, நிலைமை புரியாம உயிரை வாங்குறீங்க, இது மத்திய தொலைதொடர்பு அமைச்சரோட நேரடி உத்தரவு. நம்ம துறைக்கு விடப்பட்ட சவாலா எடுத்து சிறப்பா முடிக்கனும்."
"அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்திற்கு அந்த கிராமத்துக்கு போனாராம். அந்த மக்களுக்கு தொலைபேசி வசதி வேண்டும்னு முடிவு பண்ணாராம், இதுல ஏதோ உள்குத்து இருக்குங்க."
"அதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விஷயம். எப்படி வேலையை ஆரம்பிக்கிறதுன்னு மட்டும் சொல்லுங்க. யாரெல்லாம் போக ரெடியா இருக்கீங்க?"
"அவ்வளவு முக்கியம்னா, பொண்டாட்டி பிள்ளைங்களை விட்டுட்டு, ஒரு மாசம் அந்த குளிர்ல டெண்ட் அடிச்சு நீங்க போய் தொலைபேசி நிலையத்தை நிறுவிட்டு வாங்க."
"மலையில குன்றும், பள்ளமும் இல்லாம இருந்தாக்கூட பரவால்ல, செல் இனைப்பு கொடுத்துறலாம் அதுக்கும் வழியில்லை. மலை முழுதும் ட்ரம் உருட்டி கேபிள் போடுறதுக்குள்ள தாலி அறுந்துறும்."
"டெக்னிக்கலி நாட் ஃபீசிபில் (Technically not feasible) ரிபோர்ட் கொடுத்துறலாம் சார், வேற வழியில்லை."
மீட்டிங் ஒரு முடிவுக்கும் வராமல் சலசலப்புடன் தொடர்ந்து கொண்டிருக்க,
"இல்ல சார், ஒரு ஸ்ட்ராங் டீம் உருவாக்கினா நிச்சயமா நம்மால முடிக்க முடியும். ஏற்கனவே தனியார் தொலைபேசிகளோட வரவால நம்ம துறையோட பெயர் டவுன் ஆகிட்டு இருக்கு. இந்த டாஸ்க்கை நம்ம முடிச்சா, ஐ.டி. மினிஸ்டரே நேரடியா வந்து சேவையை துவங்கி வைப்பார். அப்போ பெயர் தெரியாத மலை கிராமத்துல நாம தொலைதொடர்பு ஏற்படுத்தி இருக்கோம்னு நாடு முழுதும் நல்ல ரீச் கிடைக்கும். நம்ம துறை மேல, நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அதிகரிச்சா போதும், நிச்சயம் பாஸிடிவ் க்ரோத் காமிக்கலாம்."
குரல் வந்த திசை நோக்கி அனைவரும் திரும்பிப் பார்த்தனர். சொன்னவர்.... சொன்னவன் இளைஞன். மற்றவர்கள் தலை தப்பியது என்று ஒதுங்கிக் கொள்ள, அவன் தலைமையில் 25 பேர் கொண்ட "டாஸ்க் ஃஃபோர்ஸ்" அமைக்கப்பட்டது.
அடுத்த இரண்டாவது நாள், தொலைபேசி நிலையம் அமைப்பதற்கான அனைத்து உபகரணங்கள், தொழில் நுட்ப சாதனங்களுடன் அந்தக் குழு மலையேறியது. உற்சாகமாக தலைமையேற்று கிளம்பினான், அவன்.
கடல்மட்டதிலிருந்து 7000 அடி உயரம். சுற்றுலா பயணிகள் இன்னும் எட்டிப் பார்க்காத அழகான மலைப் பிரதேசம். மலை முழுதும் இயற்கை விவசாயம் செழித்துக் கிடக்க, குன்றுகளையும், அருவிகளையும் தாண்டிய குளிர் பயணம்.
சாலை வசதியில்லை, சுகாதரமான உணவு முறை இல்லை, இரவானால் பெயர் தெரியாத விலங்குகளின் நடமாட்டம், கடுமையான குளிர், அனைத்தையும் தாண்டி அந்த குழுவிற்குள் ஒரு ஒற்றுமையும், நட்புணர்வும், செயல்முனைப்பும் துளிர்விட்டது. அது வேலையில் உற்சாகத்தைக் கொடுத்தது.
லைன் ஆஃப் சைட் (Line of Sight) பார்த்து, டவர் எழுப்பி, தொலைபேசி நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்து, ஸ்விட்ச்சிங் சாதனங்களை முறைமைப்படுத்தி, உள்ளூர் ஆட்களைப் பிடித்து கூலி பேசி, மலை நெடுக பள்ளம் தோண்டி, கேபிள் பதித்து, ஜம்பர் அடித்து..... 15 நாளில் கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டி இருந்தார்கள்.
அன்று, தொலைபேசி நிலைய உட்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த அவன், ஊர் மக்களின் குரல் கேட்டுத் திரும்பினான்.
"ஐயா, கேட்கோம்னு தப்பா எடுத்துக்காதீக, சம்பளம் வாங்கீட்டுத் தானேய்யா எல்லாரும் வேலை பார்க்கீக, பின்ன எதுக்குய்யா ஒரு இணைப்புக்கு தனியா ஆயிரம் ரூவா கேட்கீக!"
கன்னத்தில் பளாரென அறைந்தது போலிருந்த்தது அவனுக்கு.
"யாருங்க, உங்ககிட்ட பணம் கேட்டது?"
"நீங்க கேட்டதாச் சொல்லித்தான், உங்கூட இருக்க ரெண்டு பேரு வீடு வீடா வந்து கேட்டாக!"
"அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நீங்க ஒவ்வொரு இணைப்புக்கும் நூறு ரூபா கட்டி ரசீது வச்சிருக்கீங்கல்ல, அதுக்கு மேல யார் கேட்டாலும் ஒரு பைசா கூட கொடுக்காதீங்க.உங்க கிட்ட கேட்டவுங்களை நான் தகுந்த முறையில் விசாரிக்கிறேன்."
அதே போல விசாரித்து, தவறில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை குழுவிலிருந்து நீக்கி திருப்பி அனுப்பினான்.
மறுநாள் பணிகளை மேற்பார்வையிட உயர் அதிகாரிகள், அந்த மலைபிரதேசத்து கிராமத்திற்கு வந்தனர்.
"பண்ண வரை சரி தான். ஆன வேலை இன்னும் சீக்கிரமா நடக்கனும். அமைச்சர் திறப்பு விழாவிற்கு தேதி கொடுத்துட்டார். இன்னும் ஒரு வாரத்துல நம்ம சைடு வொர்க்கை முடிச்சாத் தான் சரியா இருக்கும்."
"முடிச்சிடுவோம் சார், ஹாஃப் வே க்ராஸ்டு, இன்னும் சப் என்ட் கனெக்ஸன் மட்டும் தான் பாக்கி."
"ஓ.கே. யங் மேன். யுவர் டீம் வில் ரிசீவ் ய க்ரேட் அப்ரிஸியேஸ்ன் ஃஃப்ரம் மினிஸ்டர்." (o.k. young man, your team will receive a great appreciation from minister)
"தேங்க்யூ சார்!"
உயர் அதிகாரிகள் குழு விடைபெற்ற்து.
சரியாக பத்தாவது நாள், மத்திய தொலைதொடர்பு அமைச்சரின் வருகையை எதிர்நோக்கி அந்த கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்த்தது.
தொலைதொடர்புத் துறையின் உயர் அதிகாரிகளும் , உயர் உயர் அதிகாரிகளும் அமைச்சருக்கு சால்வை அணிவித்து புண்ணியம் தேடிக் கொள்ள வரிசையில் காத்திருந்தனர்.
ஊடகங்களும், செய்தித்தாள்களும், சுவரொட்டிகளும் அமைச்சரின் தொலைதொடர்பு கொள்கைகளை வெகுவாக புகழ்ந்து கொண்டிருந்த்தன. 150வருட தொலைதொடர்புத் துறையின் வளர்ச்சி முழுவதையும் அமைச்சரின் சாதனைகளாக பட்டியலிட்டுக் கொண்டிருந்தன.
அமைச்சரின் வருகையை ஒட்டியும், வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டியும், மலைப்பிரதேசத்து வீடுகள் தோறும் ஆயிரம் ரூபாய் உள்ள கவர் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அன்று புகார் கூறிய கிராம மக்கள் அனைவரும் புன்முறுவலோடு பணத்தை பெற்றுக் கொண்டிருந்தனர்.
அமைச்சர் வந்தார், வரும்வழியில் அந்த மலைபிரதேசத்தில் புதிதாக தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த நூறு ஏக்கர் விவசாயத் தோட்டத்தைப் பார்வையிட்டார். நடுவில் அமைந்துள்ள பண்ணைவீட்டு பங்களாவின் புதிய தொலைபேசி இணைப்பைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டார்.
பிறகு, தொலைபேசி நிலையத்தைத் திறந்து வைத்து, தொலைதொடர்பு சேவையை நாட்டு மக்களுக்கு அர்பணித்தார். மைக்குடன் இணைக்கப்பட்டிருந்த தொலைபேசியை எடுத்து முதல் உரையாடலை துவங்கினார்.
"தாய்மார்களே... பெரியோர்களே.... நம் அரசு ஏழை எளிய மக்களுக்கு தொலைதொடர்பு ஏற்படுத்திய அரசு. எனவே உங்கள் பொன்னான வாக்குகளை ................"
முதல் தொலைபேசி உரையாடல் அந்த கிராமம் தாண்டி மலைகளெங்கும் ஓங்கி ஒலித்தது.
அப்போது,
அந்த பெயர் தெரியாத மலைபிரதேசத்து கிராமத்தில், நேற்று வரை டெண்ட் அடித்து, போராடிக் கொண்டிருந்த அந்த 21 பேரும், வழக்கம் போல தங்கள் அலுவலகத்தில் காலை ஒன்பது மணிக்கு வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு பயணப்படி, பஞ்சப்படி பாரங்களை நிரப்பிக் கொண்டு வரிசையில் காத்திருந்தனர்.
("உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு" நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)